கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள், பாதிப்புகள்

Share on facebook
Share on twitter
Share on whatsapp

தமிழகத்தில் கொரோனாவைரசு நோய்த் தொற்றுக்கு மத்தியில் தற்போது கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் குறித்த தகவல் மக்களிடையே ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நோயின் அறிகுறிகள், பாதிப்புகள், அதன் தன்மைகள் குறித்து சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன்:

202105210704541993 1 eye dr. L styvpfகேள்வி:- இதுவரையில் கேள்விப்படாத நோயாக கருப்பு பூஞ்சை என்ற ஒரு நோய் இப்போது திடீரென தமிழ்நாட்டில் தாக்க தொடங்கி இருக்கிறதே? கருப்பு பூஞ்சை (மியூகோர்மைகோசிஸ்) என்றால் என்ன?

பதில்:- கேள்விப்படாத நோய் இல்லை. இது பல காலமாகவே இருந்து வருகிறது. மண், அழுகிப்போன மரம், இலைகள் ஆகியவற்றில் இது இருக்கும். காற்றில் பறந்து வந்து, வெட்டுக்காயங்கள் வழியாகவும், மூக்கு துவாரங்கள் மூலமாகவும் உடலை தாக்கும். இது பெயருக்கு தான் கருப்பு பூஞ்சை. உண்மையில் இதன் நிறம் வெள்ளையாகத் தான் இருக்கும். உடல் பகுதியில் ஒரு இடத்தை தாக்கி, அதனை அழுகும் நிலைக்கு கொண்டு சென்று, அந்த பகுதியில் கருப்பாக மாறிவிடும். அதனால்தான் இதற்கு கருப்பு பூஞ்சை என்று பெயர்.கேள்வி:- கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்களே? அப்படியானால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோயினால் அபாயம் அதிகமாக இருக்குமா?

பதில்:- தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், பலர் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து இருப்பார்கள். இந்த கருப்பு பூஞ்சை நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களைத்தான் தாக்குகிறது. அந்த வகையில் பார்க்கும்போது, தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்டநாள் சிகிச்சையில் இருந்தவர்கள் 2 முதல் 3 மாதங்கள் வரை பாதுகாப்பாக இருப்பது நல்லது. இந்த நோய் வயது வித்தியாசம் பார்ப்பது இல்லை. அனைத்து தரப்பினரும் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

கேள்வி:- இந்த நோய்க்கான அறிகுறிகளாக என்ன வரும்?

பதில்:- தொண்டையில் கெட்டிச்சளி, மூக்கடைப்பு, தலைவலி என ஆரம்பகட்ட அறிகுறியாக இருக்கும். அதன்பிறகும் கவனிக்காமல் விட்டால், கண் பகுதியை பாதித்து, முதலில் இமை பகுதியை தாக்கி, கண் சிவந்து அல்லது வீக்கத்துடன் இருப்பது, இரட்டை பார்வையாக தெரிவது போன்ற அறிகுறிகள் இருக்கும். அதன் பின்னர் பார்வை நரம்புகளை அழுகச் செய்யும். இதனால் பார்வையிழப்பு ஏற்படும். அதனைத் தொடர்ந்து 2 அல்லது 3 நாட்களில் மூளைப்பகுதிகளை தாக்கி, மூளைக்காய்ச்சல் நோயினால் மரணத்தை கூட சந்திக்க நேரிடும்.

கேள்வி:- இந்த நோயினால் யாருக்கு அதிக பாதிப்பு ஏற்படும்?

பதில்:- நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், ஸ்டீராய்டு மருந்து தொடர்ச்சியாக எடுப்பவர்கள், வயதானவர்கள், நீரிழிவு நோய் பாதிப்பு அதிகளவில் இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகளவில் இருக்கக்கூடும். எனவே அவர்கள் தங்களை கவனமாகவும், பாதுகாப்பாகவும் பார்த்து கொள்ள வேண்டும்.

கண் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன்

கேள்வி:- இதனை தடுப்பதற்கு ஏதாவது வழிகள் இருக்கிறதா?. கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்?

பதில்:- வீட்டைச்சுற்றி இருக்கும் சுற்றுப்புற வளாகப் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 3 மாதம் வரை வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தாலே போதும். கொரோனாவில் இருந்து பாதுகாக்க நாம் எப்படி முககவசத்தை அணிகிறோமோ?. அதேபோல், இதற்கும் முககவசத்தை அணிவது அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவு வகைகளை அதிகளவில் எடுத்து கொள்வதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும்.

கேள்வி:- கருப்பு பூஞ்சை நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுமா?

பதில்:- இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. ஏற்கனவே சொன்னது போல, மண், அழுகிப்போன மரங்கள், இலைகள் ஆகியவற்றில் இருந்து காற்றின் மூலம் தான் பரவுகிறது.

கேள்வி:- இதற்கு என்ன சிகிச்சை வழிமுறைகள் இருக்கிறது?

பதில்:- மூக்கடைப்பு, தொண்டையில் கெட்டிச்சளி போன்ற ஆரம்ப அறிகுறி வந்ததும், ‘பயாப்சி’ சோதனை செய்து, கருப்பு பூஞ்சை பாதிப்பா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு அதனை உறுதி செய்துவிட்டால், ஊசி, மருந்து மூலமாகத் தான் சரிசெய்ய முடியும். அதிலும் கருப்பு பூஞ்சை ஒரு இடத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டால், அந்த பகுதியை அறுவை சிகிச்சை மூலமாகவே அகற்ற முடியும்.

கேள்வி:- கொரோனாவை போல் இதுவும் பரவத் தொடங்கிவிடுமோ?

பதில்:- கொரோனாவை போல், பரவுவதற்கான வாய்ப்பு இல்லை.

கேள்வி:- இந்த நோய்க்கு கண் டாக்டர் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியுமா? பொது மருத்துவர்களும் சிகிச்சை அளிக்கலாமா?

பதில்:- காது, மூக்கு, தொண்டை (இ.என்.டி.) நிபுணர்கள், கண் டாக்டர்கள், நரம்பியல் டாக்டர்கள் மற்றும் பொது டாக்டர்களை அணுகி சிகிச்சை பெறலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives

error: Content is protected !!