2020.12.21 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்

2020.12.21 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

01. இலங்கையில் நீதித் துறைக்கு ஒத்துழைக்கும் கருத்திட்டம்

தரமான சேவை வழங்கல் மற்றும் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான அணுகுமுறைகளை அதிகரிப்பதன் மூலம் இலங்கையில் மேம்படுத்தப்பட்ட நீதி வழங்கும் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் ‘இலங்கையில் நீதித் துறைக்கு ஒத்துழைக்கும் கருத்திட்டம்’ எனும் பெயரில் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 18 மில்லியன் யூரோக்களை வழங்குவதற்கு ஐரோப்பிய சங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த கருத்திட்டம் நீதி அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், மொத்த மதிப்பீட்டுச் செலவு 19.27 மில்லியன் யூரோக்கள் ஆகும். ஐரோப்பிய சங்கத்தால் வழங்கப்படும் நிதிக்கு மேலதிகமாக நிதியை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் ((UNDP)) போன்ற நிறுவனங்கள் வழங்குகின்றன. அதற்கமைய குறித்த நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய சங்கத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. இரத்தினபுரி, புதிய நகரத்தில் அமைந்துள்ள காணியின் ஒரு பகுதியை அலுவலகத் தொகுதிக்காக சப்பிரகமுவ மாகாண சபைக்கு வழங்கல்

இரத்தினபுரி, புதிய நகர அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக 348 ஏக்கர்களில் அமைந்துள்ள இரத்தினபுரி பாம் கார்டின் காணி நகர அபிவிருத்தி அதிகார சபையால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சப்பிரகமுவ மாகாண சபை அலுவலக் கட்டிடத்தொகுதிக்காக காணித் துண்டொன்றைப் பெற்றுத்தருமாறு சப்பிரகமுவ மாகாண சபையின் பிரதம செயலாளர் நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் கோரியுள்ளார். அதற்கமைய, அரச பிரதம மதிப்பீட்டாளர் மூலம் நிர்ணயிக்கப்படும் மதிப்பீட்டுப் பெறுமதியை செலுத்தும் நிபந்தனையின் கீழ், பாம் கார்டின் காணியின் 04 ஏக்கர் 02 றூட் காணித்துண்டை 50 வருடகால வரையறைக்குட்பட்ட குத்தகை அடிப்படையில் சப்பிரகமுவ மாகாண சபைக்கு வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. கொளவேனிகம இரஜமஹா விகாரை புனித பூமியை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடல்

மாத்தறை, கொட்டபொல பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கொளவேனிகம இரஜமஹா விகாரை இற்றைக்கு 400 வருடங்கள் பழமைவாய்ந்த தூபியும், பழமைவாய்ந்த வெள்ளரச பீடத்துடனும் கூடிய வரலாற்றுப் பெறுமதி கொண்ட பல்வேறுபட்ட அம்சங்களைக் கொண்டமைந்துள்ளது. 1931 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க பௌத்த விகாரைகள் கட்டளைச் சட்டத்தின் 4(11) உறுப்புரையின் கீழ் நிர்வகிக்கப்படும் 05 ஏக்கர் காணியில் அமைந்துள்ள இவ்விகாரையின் கண்டறிப்படாத வரலாற்றுப் பெறுமதிகளை தேடிக் கண்டுபிடிக்கும் அவசியம் உள்ளது. அதற்கமைய, தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தால் குறித்த இராஜமஹா விகாரையைப் பாதுகாக்கும் வகையில் திட்டமொன்று தயாரிப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கமைய, செயற்படுவதற்காக ‘கொளவேனிகம இராஜமஹா விகாரை புனித பூமிப் பிரதேசம்’ 1946 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க நகர மற்றும் கிராமிய நிர்மாணிப்புக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த தகவல்களை அமைச்சரவை கருத்தில் கொண்டுள்ளது.

04. பிங்கிரிய தேவகிரி இரஜமஹா விகாரை புனித பூமியை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடல்

குருணாகல் மாவட்டத்தின் பிங்கிரிய பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள பிங்கிரிய தேவகிரி இராஜமஹா விகாரை கி.மு 204-207 காலப்பகுதியின் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டமைந்துள்ளதுடன், குறித்த விகாரையின் பூமியில் தொல்லியல் பெறுமதி வாய்ந்த இடிபாடுகள் பல அடையாளங் காணப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு தேசிய வெசாக் விழாவுக்கு இணையாக இவ்விகாரையில் அபிவிருத்தித் திட்டமொன்று பௌதீக திட்டமிடல் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதனடிப்படையில் இத்திணைக்ளத்தின் ஆலோசனையுடன் புத்தசாசன அமைச்சின் நிதியொதுக்கீட்டில் சில அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, குறித்த அபிவிருத்தித் திட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்காக ‘பிங்கிரிய தேவகிரி இராஜமஹா விகாரை புனித பூமியை’ 1946 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க நகர மற்றும் கிராமிய நிர்மாணிப்புக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த தகவல்களை அமைச்சரவை கருத்தில் கொண்டுள்ளது.

05. வேலைத்தளங்களில் தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கான பாதுகாப்பு அங்கி (Overall Kit) வழங்கல்

அதிக கேள்வியுடைய துறைகளுக்கு முன்னுரிமை வழங்கி வருடாந்தம் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 100,000 இலிருந்து 200,000 வரை அதிகரிப்பதன் மூலம் தொழிற்கல்வித் துறையை விரிவாக்குவதற்காக 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடத்தக்களவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது திறன்விருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சிகள் மற்றும் புத்தாக்கங்கள் இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் வேலைத்தளங்கள் (Workshop) மற்றும் நிர்மாணத்துறை சார்ந்த பயிற்சிகளை வழங்குவதற்காக 09 நிறுவனங்கள் இயங்குகின்றன. குறித்த நிறுவனங்களின் கீழ் தற்போது கிட்டத்தட்ட 30,000 பேர் பயிற்சிகளைப் பெறுவதுடன், 2021 ஆம் ஆண்டில் ஆட்சேர்ப்பில் 40,000 பேர் வரை எதிர்பார்க்கப்படுகின்றது. இப்பயிற்சிகளின் போது பயிலுனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சம்பிரதாய தொழிலாளருக்கு அப்பால் மிகவும் நவீன தொழில் வல்லுனராக குறித்த பயிற்சியில் ஈடுபடும் வகையில் பயிலுனர்களுக்கு பாதுகாப்பு அங்கி வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, 2021 ஜனவரி மாதம் தொடக்கம் தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு உள்வாங்கப்படும், வேலைத்தளங்களில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கான பாதுகாப்பு அங்கியை வழங்குவதற்கும், குறித்த பாதுகாப்பு அங்கி இலங்கை இராணுவத்தின் ‘ரணவிரு அப்பரல் நிறுவனத்திற்கு’ வழங்கி தயாரித்துக் கொள்வதற்கும் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. தேசிய உளநல சுகாதார கொள்கை – 2020-2030

உளநல சுகாதார கொள்கை மூலம் உளநல நோய்த்தடுப்பு, சிகிச்சையளித்தல், புனர்வாழ்வளித்தல் மற்றும் சமூகத்தில் உளநல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மூலோபாய சட்டகம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னிருந்த இலங்கையின் உளநல சுகாதாரக் கொள்கை 2005 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டு 10 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. அது சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் மூலோபாயங்களின் பெறுபேறுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்காக காலத்தோடு தழுவியதாக மாற்றப்பட வேண்டுமென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, தலைமைத்துவம் மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை வலுப்படுத்தல், விரிவான உளநல சேவைகளை வழங்கல், மனிதவள விருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் போன்ற முக்கிய துறைகளின் கீழ் தேசிய உளநல சுகாதார கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதனை 2020 – 2030 வரை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் ஒழிப்புக்காக ‘வொல்பெக்கியா’ பக்றீரியாவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் முன்னோடி கருத்திட்டம் தொடர்பாக கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பித்தல்

புதிய நுண்ணுயிர் கட்டுப்பாட்டு முறைமையைக் கையாண்டு நுளம்புகள் மூலம் பரவும் தொற்றல்லா நோய்களான டெங்கு, சிக்குன்குன்னியா, மற்றும் மஞ்சள் காய்ச்சல் நோய்களிலிருந்து உலக மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் மொனாஸ் பல்கலைக்கழகத்தால் ‘உலக நுளம்பு வேலைத்திட்டம்’ எனும் பெயரில் சர்வதேச ஆராய்ச்சி பங்களிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்பான ஈட்ஸ் நுளம்பின் வைரஸ் தாக்கம் குறைத்து நோய் பரவுவதைக் குறைப்பதற்காக ‘வொல்பெக்கியா’ பக்றீரியா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நுகேகொட சுகாதார மருத்துவப் பணிமனை பிரதேசங்களிலும் கொழும்பு நகர சபைப் பிரதேசங்களையும் தெரிவு செய்து குறித்த பக்றீரியாவைப் பயன்படுத்துவதற்கு 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09 ஆம் திகதி அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சும் மொனாஸ் பல்கலைக்கழகமும் பங்களிப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன், அதன் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்துள்ளது. குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகள் 2021 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்கு பங்களிப்பு ஒப்பந்தத்தைத் நீடிப்பதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. வர்த்தக திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல்

உள்ளுர் கைத்தொழில்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் அநீதியான வர்த்தப் பிரயோகங்கள் மற்றும் உள்ளுர் கைத்தொழில்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் அதிகளவிலான பொருட்களை இறக்குமதி செய்தல் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 2018 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க திணித்தல்களுக்கு எதிரான மற்றும் எதிரீடு செய்தல் வரிச்சட்டம் மற்றும் 2018 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் வர்த்தமானி மூலம் அறிவித்தல் வேண்டியதுடன், அதற்கமைய குறித்த சட்டங்கள் 2020 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, உள்ளுர் கைத்தொழில்களுக்கு முகங்கொடுக்க நேரிட்ட மோசமான நிலைமைகளைத் தடுப்பதற்காக குறித்த இரண்டு சட்டங்களின் கீழ் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொருத்தமான அதிகாரியாக வர்த்தக பணிப்பாளர் நாயகம் அவர்களுக்கு இயலுமை உள்ளதென வர்த்தக அமைச்சர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த தகவல்களை அமைச்சரவை கருத்தில் கொண்டுள்ளது.

09. 1996 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரியல்வள சட்டத்தைத் திருத்தம் செய்தல்

1996 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரியல்வள சட்டத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் போது அதிகாரிகளுக்கு ஏற்படுத்தும் இடையூறுகளுக்கு எதிராக தண்டனைகளை அதிகரிக்கும் வகையில், குறித்த சட்டத்தை திருத்தியமைப்பதற்காக 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியில், சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஒழுங்குபடுத்தல்களுக்கான ஏற்பாடுகளை உள்வாங்கி குறித்த சட்டத்தைத் திருத்தியமைப்பதற்காக 2019 ஆம் ஆண்டு யூலை மாதம் 07 ஆம் திகதி அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களுக்கமைய சட்டமூலத்தை தயாரிப்பதற்கு சட்டமூல வரைஞருக்கு ஆலோசனை வழங்கவதற்காக கடற்றொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. தெங்கு உற்பத்திக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்து உள்ளுர் தேங்காயெண்ணெய் உற்பத்தியாளர்களைப் பாதுகாத்தல் மற்றும் இலங்கை தேங்காயெண்ணெய் குறியீட்டுப் நாமத்தைப் பாதுகாத்தல்

இலங்கையில் தெங்கு உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தினால் 50மூ வீதத்தால் உற்பத்தியை அதிகரிக்க முடியுமென துறைசார் நிபுணர்களும் உற்பத்தியாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். நுகர்வோர் அதிகாரசபையால் மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனைகளின் போது எமது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காயெண்ணெயில் 70மூ வீதமானவை தேங்;காயெண்ணெய் அல்லாத வேறு பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் உற்பத்தில் செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையால் தற்போது தெங்கு உற்பத்திக் கைத்தொழில்களை மேற்கொள்வதில் பெரும் சிரமங்கள் தோன்றியுள்ளன. இலங்கையின் தெங்கு மற்றும் தெங்கு உற்பத்திகளின் ஏற்றுமதி வருமானம் 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டில் 16.6மூ வீதத்தால் அதிகரித்துள்ளது. அதனால் அரச அனுசரணையுடன் தெங்குக் கைத்தொழிலில் புதிய போக்குகளை ஏற்படுத்த முடியுமென்பது தெரியவந்துள்ளது.

அதற்கமைய, தெங்கு உற்பத்திக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கைத்தொழில் அமைச்சர் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த கீழ்காணும் கூட்டு முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• தேங்காயெண்ணெய் இறக்குமதி செய்வதற்குப் பதிலாக உள்ளுர் தேங்காயெண்ணெய் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மூன்று மாதகாலம் துண்டுகளாக்கப்பட்ட உலர் தேங்காயை இறக்குமதி செய்தல்

• தவிட்டுடன் கூடிய துண்டுகளாக்கப்பட்ட உலர் தேங்காய் இறக்குமதியை அரசுக்குச் சொந்தமான பீ.சீ.சீ நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளல்

• நுகர்வோர் உரிமையையும் இலங்கைத் தேங்காயெண்ணெயின் குறியீட்டு நாமத்தை பாதுகாக்கும் நோக்கில் தேங்காயெண்ணெய்க்கு பாம் எண்ணெய் அல்லது வேறு எண்ணெய் வகைகளைக் கலப்படம் செய்து விற்பனை செய்தலை முற்றாகத் தடை செய்தல்

• நாட்டில் பாம் எண்ணெய்ப் பாவனையைக் குறைத்து தேங்காயெண்ணெயைப் பாவனையை ஊக்குவித்தல் அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்ளையென்பதை ஏற்றுக்கொண்டு நுகர்வோர் உரிமை மற்றும் சுகாதாரக் காரணிகளின் அடிப்படையில் தூய்மையாக்கப்பட்ட பாம் எண்ணெயை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கல்

• தெங்கு உற்பத்தியாளர்கள் பெற்றுக்கொண்டுள்ள கடன்தொகையை மீளச் செலுத்துவதற்காக சலுகைகள் வழங்கல்

• தெங்குப் பயிர்ச் செய்கையை ஊக்குவிப்பதற்காக ஊடுபயிர்ச் செய்கை, பால் உற்பத்திக்கான கால்நடை வளர்ப்பு மற்றும் நீர் வழங்கல் போன்ற தெங்குப் பயிர்ச் செய்கையின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கிலான சலுகைப் பக்கேஜ்களை அறிமுகம் செய்தல்

• இந்நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும் கண்காணிப்பதற்காகவும் ஏற்புடைய அமைச்சு மற்றும் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சின் உள்ளக செயலணி ஒன்றை அமைத்தல்

11. யூரியா உரம் உற்பத்திக் கருத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்காக சாத்தியவளக் கற்கையை மேற்கொள்ளல்

இலங்கையில் வருடாந்தம் யூரியா உரம் 340,000 மெட்ரிக்டொன் தேவை இருப்பதுடன், தற்போது அவை முழுமையாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டில் யூரியா பசளை இறக்குமதிக்காக 26 பில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளன. இலங்கையில் யூரிய உரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் அதற்காகச் செலவிடப்படும் தொகையை நாட்டில் பேண முடியும். கைத்தொழில் அமைச்சின் கீழுள்ள வரையறுக்கப்பட்ட பரந்தன் இரசாயனக் கம்பனி அதுதொடர்பாகக் கவனம் செலுத்தியுள்ளது. அதற்கமைய, கைத்தொழில் அமைச்சரால் எமது நாட்டில் யூரிய உரத்தை உற்பத்தி செய்வதற்கான சாத்தியவள ஆய்வை மேற்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனையைக் கருத்தில் கொண்டு, குறித்த சாத்தியவள ஆய்வை மேற்கொள்வதற்கு இலங்கை நனோ தொழிநுட்ப நிறுவனத்திற்கு (SLINTEC) வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

12. நிலைபெறுதகு சுற்றாடல் முகாமைத்துவத்திற்காக அமைச்சுக்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்தல்

‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்திற்கமைய நிலைபெறுதகு சுற்றாடல் கொள்கையை நாட்டில் நடைமுறைப்படுத்துவது சுற்றாடல் அமைச்சு உள்ளிட்ட சுற்றாடல் விடயதானத்துடன் தொடர்புபட்ட அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் முக்கிய பொறுப்பாகும். குறித்த பணியை மேற்கொள்வதற்காகவும் மக்களை விழிப்புணர்வூட்டுவதற்காகவும் அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் முன்வைக்கப்படும் விடயங்கள் தொடர்பாக சரியான தகவல்களை வழங்குவதற்கும் சுற்றாடல் விடயதானத்துடன் தொடர்புபட்ட அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டிய தேவையுள்ளது. அதற்கமைய, ஏற்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் பங்குபற்றலுடன் சுற்றாடல் அமைச்சின் ஒருங்கிணைப்பின் கீழ் அமைச்சுக்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு குழுவை அமைப்பதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையில் சுற்றுலாத்துறை பங்களிப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல்

இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையில் சுற்றுலாத்துறை பங்களிப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2017 ஆம் ஆண்டில் முடிவடைந்துள்ளதுடன், 2018 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட இலங்கை – தென்னாபிரிக்கா கூட்டுக் கழகத்தின் ஆறாவது அமர்வில் இரு தரப்பினருக்குமிடையே சுற்றுலாத்துறை பங்களிப்புக்கள் தொடர்பான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, இருதரப்பினருக்குமிடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. கண்டி கைத்தொழில் பூங்காவை விரிவுபடுத்தல்

1994 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை முதலீட்டுச் சபையின் கண்டி கைத்தொழில் பூங்கா 195 ஏக்கர்களில் அமைந்துள்ளதுடன், அங்கு தொழிற்சாலைகளை அமைப்பதற்காக பயன்படுத்தக் கூடிய 120 ஏக்கர் காணிகள் உள்ளது. குறித்த காணி தற்போது 26 தொழிற்சாலைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கைத்தொழில் பூங்காவுக்கு அருகாமையில் அமைந்துள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான 5.65 ஹெக்ரயார் நிலப்பரப்பு கைத்தொழில் பூங்காவின் விரிவாக்கத்திற்காக முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த காணியை விடுவிப்பு அனுமதிப்பத்திரத்தின் கீழ் இலங்கை முதலீட்டுச் சபைக்கு எடுத்துக் கொள்வதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. இருதரப்பு இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடல்

இளைஞர் சமூதாயத்தின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு கொள்கை வகுப்புக்களைத் தயாரிக்கும் போது பரஸ்பர ரீதியாக பயனுள்ளதும் நீண்டகால பங்களிப்புக்களை மேம்படுத்துவதற்குமான இளைஞர் அபிவிருத்திற்கு ஏற்புடையதான கீழ்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்காக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் தஜ்கிஸ்தான் குடியரசுக்கும் இடையிலான இளைஞர் அபிவிருத்திக்கு ஏற்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தம்

• இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் ரஷ்யா அரசாங்கத்திற்கும் இடையிலான இளைஞர் அபிவிருத்திக்கு ஏற்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தம்

16. நீதிமன்றத் தொகுதி கருத்திட்டம்

இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதடன், 2021 ஆம் ஆண்டில் தொடக்கத்தில் கருத்திட்டத்தை ஆரம்பிக்கும் வகையில், கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• கருத்திட்டத்தின் ஆலோசனைச் சேவைகள் ஒப்பந்தத்தை பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனைப் பணியகத்திற்கு வழங்குவதற்கும்

• கருத்திட்டத்தின் உப கருத்திட்டங்கள் 04 இனை நடைமுறைப்படுத்தல் மற்றும் குறித்த உப கருத்திட்டமான நீதவான் நீதிமன்றக் கட்டிடத்தொகுதி நிர்மாணிப்பு ஒப்பந்தம் வீடமைப்பு அமைச்சின் நிரந்தர தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவின் விலை மனுக் கோரலின் பரிந்துரைக்கமைய, பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனைப் பணியகத்திற்கு வழங்குவதற்கும்

• கருத்திட்டத்தின் ஏனைய 03 உப கருத்திட்டங்களுக்கு போட்டி விலைமனுக் கோரல் முறைமையைப் பின்பற்றி ஒப்பந்தம் வழங்குவதற்கும்

17. 2021 ஆம் ஆண்டிற்கான முப்படையினருக்குத் தேவையான உணவுப் பண்டங்கள் வழங்கலுக்கான பெறுகை கோரல்

2021 ஆம் ஆண்டிற்கான முப்படையினருக்குத் தேவையான உணவுப் பண்டங்கள் வழங்கலுக்கான பெறுகை கோரலுக்காக உள்ளுர் போட்டி விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, 2021 ஆம் ஆண்டிற்கான முப்படையினருக்குத் தேவையான உணவுப் பண்டங்கள் வழங்கல் ஒப்பந்தம், நியாயமான விலையைக் கோருமாறு விலைமனுதாரர்களுக்கு வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு இரத்மலான சர்வதேச விமான நிலையத்தின் மீது விமானக் கம்பனிகளைக் கவர்ந்திழுத்தல்

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையங்களைத் திறப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதன் முன்னோடிக் கருத்திட்டமாக 2020 திசம்பர் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வரை சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளைப் பின்பற்றி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையங்களைத் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய, சுற்றுலாத்துறை அமைச்சும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையும் இணைந்து தயாரித்த விசேட நேர அட்டவணைகளுக்கமைய, சர்வதேச விமானக் கம்பனிகள் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. தற்போது சர்வதேச விமானக் கம்பனிகள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகளின் மத்தியில் சர்வதேச விமானக் கம்பனிகள் எமது நாட்டுக்கு மேற்கொள்ளும் விமானப் பயண நடவடிக்கைகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் விமானக் கம்பனிகளிடமிருந்து அறிவிடப்படும் தரையிறக்கல் மற்றும் தரித்து வைத்தல் கட்டணங்களை 2020 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் விடுவிப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!