கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் காலாவதியான தீயணைப்பு கருவிகள்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (13) தீடிரென தீ பிடித்துள்ள நிலையில் தீயினை கட்டுப்படுத்த வைத்தியசாலையில்
பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தியபோதும் அவை இயங்கவில்லையென தெரிவிக்கப்ட்டுள்ளது.
இந்த நிலையில் நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் அருகில் புதிதாக
அமைக்கப்பட்டுள்ள விசேட பெண்கள் வைத்தியசாலை கட்டிடத்தில்
பொருத்தப்பட்டிருந்த தீயணைப்பு கருவிகளை கொண்டு வந்தே தீ
கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த விடயம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மிக முக்கியமான சேவை வழங்கும் நிறுவனமாக காணப்படுகின்ற வைத்தியசாலையில் காணப்படுகின்ற அனைத்து தீயணைப்பு கருவிகளும் காலாவதியாகி பல வருடங்கள் கடந்த நிலையிலும் அவை மாற்றப்படாது இருந்தமை அதிகாரிகளின் அக்கறையின்மையை
வெளிப்படுத்துகிறது எனவும் அருகில் உள்ள புதிய கட்டடத்தில் தீயணைப்பு கருவிகள் காணப்படாது இருந்திருப்பின் ஏற்பட்ட தீ பெரிதாகி பெரும் அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் பொது மக்கள் குறிப்பிடுகின்றனர்.
குறித்த தீ விபத்தின்போது ஆரம்ப கட்டத்தில் உடனடியாக தீயை அணைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற இந்த தீயணைப்பு கருவிகள் வருடந்தோறும் புதுப்பிக்க வேண்டும். ஆனால் காலாவதியாக பல வருடங்களாக அவை கவனிக்கப்படாது இருந்துள்ளமை வருத்தத்தை தருகின்றதென தெரிவித்துள்ளனர்.