உலகம்உள்நாடு

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு மீண்டும்

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வரும் சிவகங்கை கப்பல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (22) நாகை துறைமுகத்திலிருந்து 83 பயணிகளுடன் காங்கேசன்துறைக்குப் புறப்பட்டுள்ளது.

இந்தியா – இலங்கை இடையிலான இரு நாட்டு கலாசாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 2003ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நாகையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு புதிய சர்வதேச பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கப்பட்டது. 

கப்பல் சேவையானது சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் புயல், மழை, கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

சிவகங்கை கப்பல் போக்குவரத்துக்குத் தயாரான நிலையில், இந்தியா – இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் இன்று (22) ஆரம்பமாகும் என கப்பலை இயக்கும் நிறுவனம் அறிவித்தது. 

இதையடுத்து இன்று கப்பலில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகள், நாகை பயணியர் முனையத்துக்கு அதிகாலை முதல் வர ஆரம்பித்தனர். அதனைத் தொடர்ந்து நாகை பயணியர் முனையத்துக்கு வருகை தந்த 83 பயணிகளின் உடமைகள் மற்றும் பயண டிக்கெட்டை, குடிவரவு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புடன் கப்பலில் பயணிகள் ஏற அனுமதித்தனர்.

அதனைத் தொடர்ந்து நாகை துறைமுகத்திலிருந்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மும்மத பிரார்த்தனையுடன் கப்பல் சேவையானது கொடியசைத்து ஆரம்பிக்கப்பட்டது. இதில் பயணம் செய்யும், பயணியர் மகிழ்ச்சியுடன் நாகை துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் இலங்கை காங்கேசன்துறைக்கு பயணத்தை மேற்கொண்டனர். 

3 மாதங்களுக்குப் பின் நாகையிலிருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை மீண்டும் ஆரம்பமாகியதால், இந்திய – இலங்கை இருநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *