சபாநாயகர் – இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் சந்திப்பு
இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ட்ரின் தி டாம் நேற்று (24) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சங்கள் குறித்து சபாநாயகரும், வியட்நாம் தூதுவரும் இங்கு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். குறிப்பாக இரு நாட்டுக்கும் இடையில் பௌத்த மதம் மற்றும் கலாசாரத் துறைகளில் காணப்படும் தொடர்புகள் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், பாராளுமன்ற இராஜதந்திர உறவுகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை – வியட்நாம் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை ஸ்தாபிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அதிக உற்பத்தித் திறன் கொண்ட முறையில் விவசாயத் துறையைப் பயன்படுத்துவதன் ஊடாக வியட்நாமில் மேற்கொள்ளப்படும் உற்பத்திப் பொருளாதாரத்திற்கும் சபாநாயகர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். அதன்படி, விவசாயத் துறையில் தனது நாட்டின் தொழில்நுட்ப அறிவு மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக தூதுவர் தெரிவித்தார்.
சுற்றுலாத் துறையின் மேம்பாடு குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதனை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த ஏராளமான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வியட்நாம் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ட்ரின் தி டாம் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களையும் பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். பொதுவாக அக்கறை செலுத்தும் துறைகளில் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் கூட்டாண்மையை விஸ்தரிப்பதன் முக்கியத்துவத்தை வியட்நாம் தூதுவர் வலியுறுத்தினார். இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் வெளிநாட்டு முதலீட்டை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பது குறித்தும் தூதுவர் பாராட்டுத் தெரிவித்தார்.
பத்தாவது பாராளுமன்றம் அதிக பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்டது என்றும், இது முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது என்றும் பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.