உலகம்

பிரான்சிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் குண்டுவெடிப்பு

பிரான்சின் மார்சே நகரிலுள்ள ரஷ்ய தூதரகத்தின் மீது இன்று (25) குண்டுவெடிப்புத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

 குறித்த சம்பவம் தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சரக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறும்போது,

“மார்சே நகரில் அமைந்த ரஷ்ய தூதரகத்தின் மீது நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தீவிரவாத தாக்குதலின் அறிகுறிகளாகும்.இதுபற்றி பிரான்ஸ் உடனடியாக, முழு அளவிலான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ரஷ்ய அமைப்புகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் “ என கூறினார்.

இந்நிலையில், பிரான்சில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. இதற்குப் பின்புலத்தில் இருந்து செயல்பட்டவர்கள் யாரென்ற விவரம் வெளிவரவில்லை. இதுபற்றி பிரான்ஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது தீவிரவாத தாக்குதலா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

இதேவேளை கடந்த வாரம் புதன்கிழமை, ரஷ்யாவின் வெளியுறவு உளவுத்துறைப்  பிரிவு வெளியிட்ட செய்தியில், ஐரோப்பாவில், குறிப்பாக ஜெர்மனி, ஸ்கன்டிநேவியன் நாடுகளிலுள்ள ரஷ்ய தூதரகங்கள் மீது தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கான சாத்தியங்கள் பற்றி உக்ரைன் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர் என எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *