பொலிஸ் மா அதிபரின் நியமன மனுக்கள் மீதான விசாரணை மே மாதத்தில்
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் எதிர்வரும் மே மாதம் 06, 07 மற்றும் 08ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டுள்ளது.
நீதியரசர்களான ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான யசந்த கோதாகொட, ஏ.எச்.எம்.டி.நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு நேற்று (24) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தேசபந்து தென்னக்கோன் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா வாதங்களை முன்வைத்து தமது சேவைபெருநர் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதை இடைநிறுத்தி ஏற்கனவே இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்த மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதி நிர்ணயிக்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
இதற்கமைய முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட நீதியரசர்கள் குழாம் இந்த மனு எதிர்வரும் மே மாதம் 06, 07 மற்றும் 08ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவு பிறப்பித்தது.
அரசியலமைப்பு சபையினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட பரிந்துரை சட்டத்துக்கு புறம்பானது என்றும் அதற்கமைய சட்ட மா அதிபரின் நியமனம் சட்டத்துக்கு புறம்பானது என்றும் தெரிவித்து பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட இளம் ஊடகவியலாளர்களின் சங்கம் உள்ளிட்ட 09 தரப்பினர் உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல் தொடுத்திருந்தனர்.
முன்னதாக இதனுடன் தொடர்புடைய 09 மனுக்கள் கடந்த 2024 ஜூலை 24ஆம் திகதி ஆராயப்பட்டபோது விசாரணைகள் நிறைவடையும் வரை அமுலாகும் வகையில் தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபர் பதவியில் செயற்படுவதை தடுத்து இடைக்கால உத்தரவும் நீதியரசர் குழாமினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, ஜனாதிபதி சார்பில் சட்ட மா அதிபர் சபாநாயகர் மற்றும் தேசபந்து தென்னக்கோன் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனரா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
அத்துடன் இந்த தீர்மானத்தை எடுத்திருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியுள்ளமையால் அவரது விடுபாட்டுரிமை நிறைவடைந்ததால் அவரது பெயரும் பிரதிவாதி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.