பாட்டி, பாட்டியின் மூத்த சகோதரியைக் கொன்ற 15 வயது சிறுமி
மூதூர் தர்கா நகரில் தனது பாட்டி மற்றும் பாட்டியின் மூத்த சகோதரியைக் கொன்றதாகக் கூறப்படும் 15 வயது சிறுமியை கம்பஹா ரன்முத்துகலை நன்னடத்தை நிலைய காவலில் வைக்குமாறு மூதூர் நீதவான் நஸ்லிம் மொஹமட் பௌஸான் நேற்று (15) உத்தரவிட்டார்.
மூதூர் தர்கா நகரைச் சேர்ந்த சிறிதரன் இராஜேஸ்வரி (வயது 68) மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியரும் ஓய்வுபெற்ற தாதியுமான சக்திவேல் ராஜகுமாரி (வயது 74) ஆகியோரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்..
பாட்டி தன்னை நேசிக்கவில்லை என்றும், வளர்ப்புப் பிள்ளைகள் இருவரை நேசிப்பதாகவும், தாயுடன் எப்போதும் தகராறு செய்வதாகவும், தந்தையிடம் இருந்து தாய் பிரிந்ததற்கு பாட்டியே காரணம் என்றும் சிறுமி கூறியதாக, நீதவானிடம் பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது மூதூர் ஆதார வைத்தியசாலையில் குடும்ப சுகாதார சேவையாளரான சிறுமியின் தாயார் இரவு கடமையில் இருந்ததாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.