உலகம்

உலகில் 40 கோடிக்கு மேற்பட்டோருக்கு செவிப்புலன் பிரச்சினை – தீர்வு என்ன?

‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை’’ என வான் புகழ் வள்ளுவரே தெரிவித்துள்ளார். கேள்விச் செல்வமே ஒருவருக்குக் கிடைக்கும் மிகச்சிறந்த செல்வமாகும். அத்தகைய கேள்விச் செல்வத்தின் திறப்பு வாசலாகத் திகழ்வதுதான் செவி.

உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு வருடமும் மார்ச் 03ஆம் திகதியை உலக செவிப்புலன் தினமாக அனுஷ்டித்து வருகின்றது.

காது கேட்பதன் முக்கியத்துவத்தையும் காதுகேளாத் தன்மையை எவ்வாறு தவிர்ப்பதென்பதும் மக்களுக்கு உணர்த்துவதற்கான காலத்தின் தேவை தற்போது எழுந்துள்ளது.

சனத்தொகையில் 10 வீதமானோர் காது கேளாமைக்கு சிறு குறைபாடுகளுக்கு ஆளாகியுள்ளனர்.

உலக செவிப்புலன் தினத்தை முன்னிட்டு மக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் உலகம் முழுவதிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதற்கமைய உலக செவிப்புலன் தினத்தை முன்னிட்டு இலங்கையிலும் தொண்டை, காது, மூக்கு (ENT) சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்கும் நோக்கில் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

செவிப்புலன் குறைபாடு காரணமாக தகவல் தொடர்பு சிக்கல்கள் ஏற்படுகின்றன. தொடர்ச்சியான காதுகேளாமை காரணமாக நினைவாற்றலை இழக்க வழியேற்படுகின்றது.

அத்துடன், மக்கள் செவி அரிப்புக்காக காதுகளில் பல்வேறு பொருட்களை விடுகின்றனர். அவை காதுக்கு சேதத்தை ஏற்படுத்துமென்று அறுவைசிகிச்சை வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், அதிக சத்தத்திலிருந்து காதுகளைப் பாதுகாப்பது முக்கியமென்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அக்குழந்தையின் செவிப்புலனில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அத்துடன், தொழிற்சாலை போன்ற அதிக இரைச்சல் கூடிய இடங்களில் ஒருவர் கடமையில் இருந்தால் காதுகளைப் பாதுகாக்க வேண்டும்.

காதுக்குள் தண்ணீர் போகாதவாறு பாதுகாக்க வேண்டும். ஏதேனும் ஒரு பொருள் காதில் சிக்கிக் கொண்டால் உடனே உரிய மருத்துவரொருவரை அணுகி அதனை அகற்றுவது மேலானதென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

காதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது செவித்திறன் குறைபாடு ஏற்பட்டாலோ தாமதிக்காமல் மருத்துவரை அணுகுமாறு கண் மற்றும் காது தொடர்பான விசேட நிபுணர் வைத்தியர் சந்திரா ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிமிடம் நீங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ அல்லது ஏதாவது ஓர் இடத்திலோ இருப்பீர்கள். வீடாக இருந்தால் உங்களுக்கு விருப்பமான பாடல்களைக் கேட்டுக்கொண்டிருப்பீர்கள். உங்களுடன் யாராவது பேசிக்கொண்டிருப்பார்கள் அல்லது உங்களுக்குப் பக்கத்தில் யாராவது உரையாடிக்கொண்டிருப்பார்கள்.

அலுவலகமாக இருந்தால் கணினிப்பொறியைத் தட்டும் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும். பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் பஸ்ஸின் எஞ்ஜின் சத்தம், ரயிலின் சத்தம் என நீங்கள் இருக்கும் இடம், செய்யும் வேலையைப் பொறுத்து உங்களைச் சுற்றி ஏதாவதொரு சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும். இந்தச் சத்தம் எல்லாம் ஒரு கணம் நின்று, ஆழ்ந்த அமைதியை ஏற்படுத்தினால், உங்களைச் சுற்றி, உங்களுக்கு வெளியே நடக்கும் எந்த நிகழ்வுகளின் ஒலியும் உங்களின் காதுகளுக்கு எட்டாமல் இருந்தால், அந்தக் கணம் உங்களுக்கு எப்படி இருக்கும்?

வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு சூழல் ஏற்படும். ஆம்… இந்த உலகத்திலிருந்து தனித்து

விடப்பட்டதைப்போன்று உணர்வீர்கள்.

ஆனால், உலகில் 44.6 கோடி பேர் அப்படித்தான் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு குறைபாட்டால் தங்களின் கேட்கும் திறனை இழந்து மாற்றுத்திறனாளிகளாக மாறியிருக்கிறார்கள். அவர்களில் பலர் உபகரணங்களின் உதவியுடன் கேட்கலாம். ஆனால், ஒரு பாடலை நாம் கேட்டு ரசித்துக்கொண்டாடும் அளவுக்கு அவர்களால் கேட்க முடியாது.

செவித்திறன் பாதிப்பு இன்னும் முப்பது ஆண்டுகளில் இரண்டு மடங்காகுமென்கிறது உலக சுகாதார அமைப்பு. உலகளவில் செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 44.6 கோடி பேரில், 3.4 கோடி பேர் குழந்தைகள்.

பெரும்பாலும் பிறவிக் குறைபாடு காரணமாகத்தான் அதிகமானோருக்குச் செவித்திறன் பாதிப்பு ஏற்படுகிறது. நெருங்கிய உறவில் திருமணம் செய்துகொள்வதே அதற்குக் காரணம் என்கிறது சுகாதாரப் பிரிவு.

 “பிறந்த குழந்தைகளுக்கு செவித்திறன் பாதிப்பு ஏற்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நெருங்கிய உறவில் திருமணம், கர்ப்பகாலத்தில் தாய்க்கு வைரஸ் பாதிப்பு, பிறந்தவுடன் குழந்தைக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு, மூச்சுத்திணறல் பாதிப்பு போன்ற காரணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு செவித்திறன் பாதிப்பு உண்டாக வாய்ப்புள்ளது.

அப்படி ஏதாவது பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக ஓட்டோகோஸ்டிக் எமிஷன் டெஸ்ட் (Otoacoustic Emissions Test) செய்யவேண்டியது அவசியம். அதில் குழந்தைக்கு கேட்கும் திறனில் பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டால், மூன்று மாதம் கழித்து மீண்டும் பேரா டெஸ்ட் (Bera test – Brainstem evoked response audiometry) செய்து அறுவை சிகிச்சை அல்லது மருந்துகளின் மூலம் பாதிப்பைச் சரிசெய்வோம். உடல்நலக் குறையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவமனைகளிலேயே இந்தச் சோதனைகளைச் செய்வார்கள். அதைத் தாண்டிப் பெற்றோரும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

காதுகேளாமை பாதிப்பை குழந்தைப் பருவத்திலேயே கண்டறிந்தால் 60 சதவீத பாதிப்பைச் சரிசெய்துவிட முடியும் என்கிறது உலக சுகாதார அமைப்பு.

ஒரு வயதுக்கு மேலாகியும் குழந்தைக்குப் பேச்சு வராமல் இருந்தால் ஏதாவது சத்தம் கேட்டுத் திரும்பாமல் இருந்தால் அவர்களுக்குக் காது கேட்பதில் பிரச்சினை இருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்து கொள்ளும் குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்யவேண்டியது அவசியம்.

பாடசாலை செல்லும் வயதிலுள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி காது அடைத்துக்கொள்வது, காதில் சீழ் வடிதல், உதட்டுப்பிளவு போன்ற பாதிப்புகள் இருந்தால் செவித்திறன் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, பெற்றோர்தான் குழந்தைகளுக்கு கேட்கும் திறன் குறைகிறதா, சீழ் வடிகிறதா என்பதைக் கண்காணித்து மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லவேண்டும்.

பெண்களைப் பாதிக்கும் Osteosclerosis என்ற காது எலும்பு பாதிப்பு நோயாலும் செவித்திறன் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தப் பாதிப்பு முப்பது வயதுக்கு மேலுள்ள பெண்களுக்குத்தான் ஏற்படுகிறது. இது தாயின் மூலம் பிள்ளைகளுக்கு வர வாய்ப்புள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் எளிய அறுவை சிகிச்சை மூலம் இதைச் சரிசெய்யலாம்.

ஓட்டுநர்கள், அதிகமாகச் சத்தத்தை எழுப்பும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள், ஹெட்போனை அதிக சத்தமாக வைத்துக் கேட்பவர்களுக்கு (Noise-induced hearing loss) எனும் செவித்திறன் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

குழந்தைகள் இணையத்தில் கல்வி கற்கும்போது ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் அவர்களின் காதுகளுக்குப் பாதிப்பு ஏற்படும்.

இவ்வாறு கண் மற்றும் காது தொடர்பில் விசேட நிபுணர் வைத்தியர் சந்திரா ஜயசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குழந்தைகள் அடிக்கடி இயர்போன் பயன்படுத்துவதால், காதுக்குள் காது மெழுகு தள்ளப்படுவதாகவும் இதனால் காது அழுகல், பூஞ்சை, காது டிரம் ஆகிய பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக , இக்கால சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமன்றி தொலைத்தொடர்புத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் எனப் பெரும்பாலா னோர் தற்போது அதிக நேரம் செல்போன் பயன் படுத்தும் சூழலில், ஹெட்போன், ப்ளூடூத் அணிந்து கொள்கின்றனர். இவை நாம் சாதாரணமாகக் கேட்கும் ஒலியை விடக் கூடுதலான ஒலியையும் அதிர்வையும் ஏற்படுத்தக் கூடியவை.

இரகசியத்துக்காகவும் இதர இரைச்சலிலிருந்து தவிர்த்துக்கொள்வதற்காகவும் இசைக்காகவும் இதுபோன்ற ஹெட்போன், ப்ளூடூத் அணிந்துகொள்வது பெருகிவரும் நிலையில், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதுபோல், இவற்றை அரை மணிநேரத்துக்கு மேல் பயன்படுத்துவதால் செவித்திறன் குறைபாடு ஏற்படும் அபாயமுள்ளது.

உலகில் உயிரோடு வாழும் வரை பார்க்கவும் கேட்கவும் நமக்கு கண்களும் காதுகளும் அவசியம் என்பதை உணர்ந்துகொண்டால், செவியை நாம் பாதுகாக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. காது கேட்க உதவும் உபகரணங்களின் உதவியுடன் இந்தப் பாதிப்பை ஓரளவு சரிசெய்யலாம்.

காது, மூக்கு, தொண்டை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. அவற்றில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும் மருத்துவரிடம் சென்றுவிடுவது நல்லது.

கே. அனுஷா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *