உக்ரைனின் அணு உலைகளை கோரும் அமெரிக்கா
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கியும் ஆக்கபூர்வமானதொரு தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டள்ளனர்.
ஒரு மணித்தியாலத்திற்கு மேல் நீடித்த இந்த தொலைபேசி உரையாடலில் தற்காலிக போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இதேவேளை இருவருக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் நல்ல விதமாக இருந்ததாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடக தளமான ட்ருத் சோசியலில் இது குறித்து எழுதியுள்ள ட்ரம்ப் ரஷ்யாவையும் உக்ரைனையும் அவர் அவர் கோரிக்கைகள் தேவைகளின் அடிப்படையில் இணைப்பதை நோக்கமாக கொண்டே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யாவுக்கிடையேயான போர்நிறுத்த முயற்சிகள் சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் இரு தலைவர்களுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தை தொடர்பாக விரிவான அறிக்கையொன்றை அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மார்க்கோ ரூபியோ விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
உக்ரைன் மேலதிக வான்பாதுகாப்பு பொறிமுறைகளை பெறுவதற்கு உதவுவதாக டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்தார்.
உக்ரைனின் மின்விநியோகம் அணுஉலைகள் குறித்து ரஷ்ய உக்ரைன் தலைவர்கள் விவாதித்தனர் . அமெரிக்காவிடம் மின்சாரம் மற்றும் பயன்பாட்டு நிபுணத்துவம் உள்ளதால் உக்ரைனின் மின்விநியோகத்தினை நிர்வகிப்பதில் அமெரிக்கா உதவக்கூடும் என ட்ரம்ப் ஸெலன்ஸ்கியிடம் தெரிவித்தார்.போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதேபோல் மின்நிலையங்கள் அணுஉலைகள் அமெரிக்காவின் உரிமையானால்,அது அந்த உட்கட்டமைப்பிற்கு சிறந்த பாதுகாப்பாக அமையும் எனவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியுடனான இந்த உரையாடல் பெரும் நிம்மதியாக அமைந்துள்ளதோடு குறித்த உரையாடலானது நேர்மறையானதாக ,வெளிப்படையானதாக உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.