3 நாட்களில் இலட்சாதிபதியான பிச்சைக்காரர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இரமழான் மாதத்தையொட்டி, சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜா நகரில் ஒரு மசூதி அருகே ஒருவர் பிச்சை எடுப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து மசூதிக்கு சென்ற பொலிஸார் குறித்த பிச்சைக்காரரை கைதுசெய்துள்ளனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், கைதுசெய்யப்பட்டவர் சட்டவிரோதமாகக் குடியேறியவரென்றும் வெறும் 3 நாள்களில் பிச்சை எடுத்ததன் மூலம் ரூபா 3.26 இலட்சம் (14,000 திர்ஹாம்) சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.
அந்நாட்டில் இரமழான் மாதத்தின்போது, பிச்சை எடுப்பது குற்றச்செயலென அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் பிச்சை எடுப்பதை சிலர் பருவகாலத் தொழிலாக மேற்கொள்கின்றனர்.
டுபாயில், இரமழான் மாதத் தொடக்கத்தில் 127 பிச்சைக்காரர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூபா 11.66 இலட்சத்துக்கும் (50,000 திர்ஹாம்) அதிகமான தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.