காஸாவில் 15 மனிதாபிமான ஊழியர்கள் படுகொலை – காணொளி வெளியீடு
காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்து வந்த ஊழியர்கள் இஸ்ரேல் இராணுவத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 23 ஆம் திகதி காஸாவில் உள்ள ராஃபா நகரத்தில் அம்பியுலன்ஸ்களில் சென்றுகொண்டிருந்த உதவுக்குழுவினர் மீது இஸ்ரேல் இராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதில் ரெட் கிரசண்ட் ஊழியர்கள் 8 பேர், பாதுகாப்பு அவசரப்பிரிவை சேர்ந்த 6 உறுப்பினர்கள் மற்றும் ஐநாவின் UNWRA சேர்ந்த ஊழியர் ஒருவர் என மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்கள் உதவிக்குழுவைச் சேர்த்தவர்கள் என்று தெரிந்தே இஸ்ரேல் வேண்டுமென்றே அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கள் வீரர்களை நெருங்கி வந்த வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
இந்நிலையில் அன்றைய தினம் நடந்த தாக்குதல் தொடர்பாக, உயிரிழந்த உதவிக்குழுவில் இருந்த பலஸ்தீனிய ஊழியர் ஒருவரின் தொலைபேசியிலிருந்து அந்தக் காணொளி மீட்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் பயணம் செய்த அம்பியுலன்ஸ் , தீயணைப்பு வாகனங்களில் அவசரநிலையை உணர்த்தும் விளக்குகள் எரிந்த நிலையில் இருப்பதும், இஸ்ரேலிய இராணுவத்தினர் வாகனங்களை நோக்கியும் உதவிக்குழுவினரை நோக்கியும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது பதிவாகி உள்ளது.
இதன்படி இஸ்ரேல் வேண்டும் என்றே உதவிக்குழுவினர் 15 பேரை படுகொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கண்டங்கள் எழுந்து வருகின்றன. இந்த காணொளி குறித்து இஸ்ரேல் இன்னும் எதுவித விளக்கமும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.