திண்மக்கழிவு முகாமைத்துவ ஒழுங்குபடுத்தல் வேலைத்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துக
அரச நிறுவனங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவ ஒழுங்குபடுத்தல் வேலைத்திட்டத்தை உடன் அமுல்படுத்துமாறு அறிவித்து சகல அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சினால் விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, சகல அரச நிறுவனங்களிலும் 3R எண்ணக்கருவுக்கமைய மட்டுப்படுத்தல், மீண்டும் பயன்படுத்தல் மற்றும் மீள்சூழற்சி என்ற நடைமுறைகள் பின்பற்றப்படுத்தல் அவசியமாகுமென அந்த சுற்றிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடமையின்போது இயன்றளவு கடதாசி பயன்பாட்டினை குறைத்தல், தனி பயன்பாட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டினை இயன்றவரையில் குறைக்க முயற்சி செய்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பயன்பாட்டின் மூலம் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதை குறைத்தல் அவசியாகும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் மீள்சூழற்சி செய்யக்கூடிய உற்பத்திகளுக்காக முன்னுரிமை கிடைக்கும் திட்டமிடல் கொள்கைகளை செயற்படுத்தல், நிலைத்திரு நுகர்வுப் பழக்கங்களை பின்பற்றுதல், கழிவுகளை சேகரித்தல் மற்றும் அகற்றுதல் போன்ற விடயங்களுக்கு முறையான ஒழுங்குமுறைகளை பின்பற்றுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றறிக்கை அமுல்படுத்தப்பட்ட நாளிலிருந்து 06 மாத காலத்துக்குள் தங்களது நிறுவனங்களில் முறையான கழிவு முகாமைத்துவ திட்டமொன்றை தயாரித்து அதனை அமுல்படுத்த வேண்டும் என்பதுடன் அதற்காக நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.