உலகம்

மாணவர்கள் போராட்டங்களுக்கு தடையிட மறுத்த ஹார்வர்ட்; மானியங்களை நிறுத்திய ட்ரம்ப்!

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் மாணவர்களும் உயர்கல்வி பயில்கின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்க மறுத்ததால் ஹார்வர்ட் பல்கலைகழகத்துக்கான $2.2 பில்லியன் மானியங்களையும் $60 மில்லியன் ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

முன்னதாக, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துமாறு ட்ரம்ப் நிர்வாகம் நீண்ட பட்டியல் ஒன்றை அனுப்பியது. அதில் இருந்த கெடுபிடிகளுக்கு இணங்கப்போவதில்லை என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்தது. இந்நிலையில் தான், ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

நிபந்தனைகள் என்னென்ன?

 மாணவர்கள் முகக்கவம் அணியக் கூடாது, மாணவர் சேர்க்கை முழுக்க முழுக்க மெரிட் அடிப்படையிலேயே இருக்க வேண்டும், பல்கலைக்கழக மாணவர்கள் பற்றி தணிக்கை மேற்கொள்ள வேண்டும், அதே போல் பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் குழுக்களின் தலைவர்கள் அகியோரின் பின்புலம் பற்றியும் தணிக்கை செய்ய வேண்டும். வளாகத்தில் மாணவர்கள் கிரிமினல் நடவடிக்கைகள், வன்முறை, அடக்குமுறையில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்று ட்ரம்ப் நிர்வாகம் வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் பலஸ்தீன் ஆதரவு போராட்டம் உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகளை முன்வைத்து மாணவ அமைப்புகள் நடத்தும் போராட்டங்களை ஒடுக்கும் வகையிலேயே ட்ரம்ப் அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சர்வாதிகாரம் கூடாது.. 

இந்நிலையில் ட்ரம்ப் அரசின் கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்துள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம், ஆட்சி அதிகாரத்தில் எந்தக் கட்சி வேண்டுமானாலும் அமரலாம். ஆனால், எந்த அரசாக இருந்தாலும் எங்கள் மீது சர்வாதிகாரத்தை செலுத்தக் கூடாது என்று தெரித்துள்ளது.

ஹார்வர்ட் தலைவர் எலன் கார்பர் இது குறித்து கூறுகையில்,

 “ட்ரம்ப் நிர்வாகத்தின் நிபந்தனைகள் பல்கலைக்கழகத்தில் முதல் திருத்த உரிமைகளுக்கு எதிரானது. இனம், நிறம், தேசத்தின் அடிப்படையில் மாணவர்கள் மீது எவ்வித பேதமும் காட்டப்படாது என்ற பல்கலைக்கழகத்தின் விதியை மீறுவதாக அமைந்துள்ளது. பல்கலைக்கழகத்தில் கல்வி பயில யாரை அனுமதிக்க வேண்டும், யாரை பாடம் நடத்த பணியமர்த்த வேண்டும் என்று அரசு எங்களுக்கு கட்டளையிட முடியாது. ஆட்சி அதிகாரத்தில் எந்தக் கட்சி வேண்டுமானாலும் அமரலாம். ஆனால், எந்த அரசாக இருந்தாலும் எங்கள் மீது சர்வாதிகாரத்தை செலுத்தக் கூடாது” என்று காத்திரமாகத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள 

ட்ரம்ப் அரசின் யூத எதிர்ப்பை தடுக்கும் கூட்டு நடவடிக்கைக் குழு, “ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கருத்து நமது நாட்டின் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தற்போது நிலவும் பிரச்சினைகளின் பின்னணியில் உள்ள தொற்று மனப்பான்மையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.” என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *