உள்நாடு

குரங்கைக் குற்றவாளியாக்காதீர்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடே மின் தடையால் இருளில் மூழ்கியது. இலங்கை இருளில் மூழ்குவது இது முதன்முறையன்று. அநேகமாக இறுதி முறையாக இருக்கவும் வாய்ப்பில்லை. ஆனால், திடீரென ஏற்பட்ட மின்தடைக்கு குரங்கே காரணம் என்று சொல்லப்பட்டமையானது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஞாயிறு ஏற்பட்ட மின்தடையை சீர்செய்ய பல மணி நேரங்கள் பிடித்தன. அதைத் தொடர்ந்து கடந்த வாரத்தின் சில நாட்கள் திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இது ஆளும் தேசிய மக்கள் சக்திக்குப் பலத்த அசௌகரியத்தைக் கொடுத்துள்ளதென்பது உண்மை. ஏற்பட்ட மின்தடையென்பது வினைத்திறனின்மையின் வெளிப்பாடு என்பதை இலங்கையர்கள் அனைவரும் ஏற்கின்றனர். ஆனால், அதற்குக் குரங்கைக் குற்றவாளியாக்குவதை நகைச்சுவையுடன் மறுக்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை திடீர் மின்தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து, இவ்வாறு ஏற்பட்டமைக்கான காரணம் யாதென மின்சக்தி அமைச்சர் குமார ஜெயகொடியிடம் வினவியபோது, குரங்கொன்று மின்மாற்றியில் சிக்குண்டதால் ஏற்பட்ட சிக்கலால் நாடுதழுவிய மின்தடை ஏற்பட்டதாகத் தெரிவித்தார். இலங்கையர்களின் இரண்டு கேள்விகளே இருந்தன. முதலாவது, ஒரு குரங்கால் முழு நாட்டின் மின்சாரத்தையும் முடக்க முடியுமா. இரண்டாவது, அச்சிறிய அசம்பாவிதத்திலிருந்து வழமைக்குத் திரும்ப ஏன் ஆறு மணித்தியாலங்கள் எடுத்தன. 

இதேவேளை, மறுநாள் திங்கட்கிழமை ஊடக சந்திப்பை நிகழ்த்திய இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாப்பிட்டிய மின்தடைக்கு இன்னொரு காரணத்தைக் கூறினார். ஞாயிற்றுக்கிழமைகளில் நாடுதழுவிய ரீதியில் மின்சாரப் பாவனை குறைவு. ஆதலால் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியகலங்களின் வழியாக உற்பத்தியாகும் மின்சாரம் தேவைக்கு அதிகமானது. அதிக மின்சாரத்தால் மின்சாரக் கட்டமைப்பு நெருக்கடிக்குள்ளானது.

இதனாலேயே மின்தடை ஏற்பட்டதென்று விளக்கினார். அவரது கருத்துப்படி மின்தடைக்கு குரங்கு மின்மாற்றியின் மீது பாய்ந்தமை காரணமல்ல. ஆக அவரது கருத்துப்படி சூரிய கலன்கள்தான் காரணம். அதேவேளை, மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட சிக்கலால் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகளில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

 இங்கே முக்கியமான கேள்வியொன்றுண்டு. இதற்குப் பொறுப்பான அமைச்சர் ஒரு பொறியியலாளரும் கூட. குரங்கு பாய்ந்ததால் மின்தடை ஏற்பட்டது என்ற கருத்தை அமைச்சருக்கு யார் தெரிவித்தது? இலங்கை மின்சார சபையின் தகவல்களின் அடிப்படையிலேயே இக்கருத்தை அமைச்சர் தெரிவித்தாரா? அப்படியாயின், மறுநாள் மின்சார சபையின் தலைவர் வேறொரு கருத்தைச் சொன்னது ஏன் “குரங்கால் மின்தடை” என்பது சர்வதேச அரங்கில் ஒரு செய்தியாயுள்ளது. ஏராளமான சர்வதேச ஊடகங்கள் இக்கதையை செய்தியாகக் காவியுள்ளன. இது இலங்கையின் பிம்பத்துக்கு நல்லதல்ல.

இவ்விடத்தில் மின்சார சபையின் தலைவர் அதிகப்படியான சூரியகல மின்சாரத்தின் உற்பத்தி மின்கட்டமைப்பின் சமநிலையைக் குலைத்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், இலங்கை 2030இல் 80வீதமான மின்சார உற்பத்தியைப் புதுப்பிக்கத்தக்க சக்தியின் மூலம் உருவாக்குவதற்கு உறுதிபூண்டுள்ளது. அவ்வகையில் அதிகளவிலான சூரிய மின்னுற்பத்தி நாட்டுக்கு நல்லதுதானே. ஆனால், இங்குதான் சிக்கல் பன்முகப்பட்ட வடிவில் கருக்கொண்டுள்ளது.

இலங்கையின் நீண்டகால மின்னுற்பத்தித் திட்டத்தின்படி 2024ஆம் ஆண்டுக்கு 160 ஆறு சூரியகல மின்சாரத்தையும் 2025 மற்றும் 2026 ஆண்டுகளில், ஆண்டுக்கு தலா 150 ஆறு சூரியகல மின்சாரத்தையும் இலங்கையின் பொது மின்கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட வேண்டும். 2024ஆம் ஆண்டு 600 ஆறு சூரியகல மின்சாரத்தை பொதுக்கட்டமைப்புக்குள் இணைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது 2024 முதல் 2026 வரை ஏற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்ட அளவை விட மிக அதிகமானது.

எனவே, இவ்வளவு மின்சாரத்தைத் தாங்கும் வலு தற்போதைய மின்சாரக் கட்டமைப்பில் இல்லை. இதனால் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை பலவீனமடைந்தது. இவ்வளவு தொகையான மின்னுற்பத்திக்கு வாய்ப்புள்ளதென்பதை இலங்கை மின்சார சபை அறியாமலிருக்க வாய்ப்பில்லை. குறைந்தபட்சம் இவ்வாறு உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து வைக்கக்கூடிய வழிவகைகளையும் கட்டமைப்புகளையும் உருவாக்கியிருக்க வேண்டும்.

ஆனால், அது நடைபெறவில்லை. மாறாக, இலங்கை மின்சார சபை ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகளவில் மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கோருகிறது.

இந்நிகழ்வு பல ஐயங்களை எழுப்புகிறது. மூன்று நிகழ்வுகள் குறித்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளன. முதலாவது பாணந்துறையிலுள்ள உப மின்வழங்கும் நிலையத்தின் மின்பிறப்பாக்கியில் குரங்கு பாய்ந்தமையால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு.

இரண்டாவது, அதிகளலான மின்சாரத்தை குறித்த தினம் சூரியகலங்கள் உற்பத்திசெய்து பிரதான மின்கட்டமைப்பு வழங்கியமையால் மின்கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை உருக்குலைந்தது. மூன்றாவது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நுரைச்சோலை அனல்மின் நிலையம் செயலிழந்தது.

வெறுமனே குரங்கு பாய்ந்தமையால்தான் இவ்வாறு ஏற்பட்டது என்று வைத்துக் கொள்வோம். ஒரு குரங்கால் ஏற்பட்ட ஒரு மின்மாற்றியின் செயலிழப்பு என்பது நாடுதழுவிய மின்தடையை ஏற்படுத்துமாயின் உண்மையான பிரச்சினை நாட்டின் மின்கட்டமைப்பானது வலுவற்றது. இது கட்டுப்பாட்டு அமைப்புகள் திறம்பட இன்மை மற்றும் தொழில்நுட்ப பின்னடைவு ஆகியவற்றிலுள்ள அடிப்படை பலவீனமாகும்.

மின் கட்டமைப்பு என்பது ஒருபோதும் ஒரு தோல்வியில் சரிந்துவிடக் கூடாது. ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட அமைப்பில், மின்மாற்றி செயலிழந்தால் நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்படக் கூடாது. குறித்த கட்டுமானம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது, நிர்வகிக்கப்படுகிறது மற்றும் தானியங்கு செய்யப்படுகிறது என்பதே தொடர்ச்சியான மின்சார வழங்கலையும் அனர்த்தங்களைக் கையாளுதலையும் உறுதிப்படுத்தும். அண்மைய மின்வெட்டு இலங்கையின் மின்சாரக் கட்டமைப்பின் கடுமையான அடிப்படைக் குறைபாடுகளை இன்னொருமுறை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. இது ஒரு தற்செயலான விபத்து அல்ல. ஆனால், பொறியியல், கொள்கை மற்றும் தொழில்நுட்பத் தோல்வி. இது அவசரமாக கவனிக்கப்பட வேண்டும்.

இரண்டாவது, அதிகளவிலான சூரியகல மின்சாரம் கட்டமைப்புக்குள் வந்தமையால் ஸ்திரமின்மை ஏற்பட்டதென்பதை ஏற்றால், அவ்வாறு அளவுக்கதிகமான மின்சாரத்தை பொதுக்கட்டமைப்புக்குள் ஏற்றுக்கொள்ள அனுமதியை மின்சார சபைதானே வழங்கியது. கடந்தாண்டு புதிதாகச் சேர்க்கப்பட்ட சூரியகல மின்சக்தி என்பது வீடுகளின் கூரையில் போடப்பட்ட சூரியகலன்களின் வழி உருவாகும் மின்சாரமே. இவ்வாறு கூரையில் சூரியகலன்களை அமைப்பதற்கான அனுமதியை இலங்கை மின்சார சபைதானே வழங்கியது. எனவே, இந்தக் கூற்று முன்னுக்குப் பின் முரணானது. அதேவேளை, திட்டமிட்டமைக்கு மேலாக அளவுக்கதிகமான சூரியகல மின்சாரத்தை பொதுக்கட்டமைப்புக்குள் அனுமதித்தது யார் என்ற வினாவுக்காக பதிலை அரசாங்கம் வழங்க வேண்டும்.

மூன்றாவது, நுரைச்சோலை அனல்மின் நிலையம் சீர்குலைவுக்கு ஆளானமை குறித்து இலங்கை மின்சார சபை மௌனம் காக்கிறது. உண்மையில், ஏற்பட்ட மின்தடைக்கு நுரைச்சோலை அனல்மின் நிலையம் சீர்குலைந்தது காரணமாக இருக்கலாம். ஆனால், அதை மறைப்பதற்காகவே குற்றம் குரங்கின் மீதும் பின்னர் சூரியகல உற்பத்தியின் மீதும் போடப்படுகிறது என்பது சிலரது வாதமாகும். அவ்வாதத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் இலங்கை மின்சார சபையின் கடந்தகால நடவடிக்கைகள் இருந்து வந்துள்ளன.

இலங்கையின் மின்சார உற்பத்தியை புதுப்பிக்கத்தக்க சக்தியை நோக்கிய திசையில் நகர்த்துவதற்கு இலங்கை மின்சார சபை தொடர்ச்சியாகத் தடையாக இருந்து வருகிறது. நுரைச்சோலை அனல்மின் நிலையம் தொடர்ச்சியாக சிக்கல்களை வழங்கிவந்துள்ள நிலையிலும் அனல்மின் உற்பத்தி மீதான மின்சார சபையின் காதல் நன்கறியப்பட்டது. இதனோடு நிலக்கரிக் கொள்வனவு ஊழல்களையும் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

இதேவேளை, குரங்கு பாய்ந்ததாய் சொல்லப்படும் பாணந்துறை உப மின்வழங்கும் நிலையத்

தின் காவலாளி கடந்த ஞாயிறு, தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்ட விடயம் முக்கியமானது.

“இங்கு மின்பிறப்பாக்கிகள் மீது குரங்குகள் பாய்வது வழமையானது. விபத்துகள் நடப்பதுண்டு. ஆனால், அவை உடனேயே சரியாகும். இவ்வாறு மின்தடை ஏற்படுவதில்லை. குரங்குகள் பாய்ந்து விபத்து ஏற்படும் சந்தர்ப்பங்கள் உண்டு. இன்று அவ்வாறு நிகழவில்லை.”

உண்மையில் என்ன நடந்ததென்பது குறித்து தெளிவான ஒரு பதிலை இலங்கை மின்சார சபை இலங்கை மக்களுக்கு வழங்கவில்லை. கிடைக்கப்பெறுகின்ற தகவல்களின்டி இலங்கை மின்சார சபையில் 26,131 ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் மாதச் சம்பளம் சுமார் ரூ. 3,000 மில்லியன், இதில் 600 மில்லியன் பொறியியலா

ளர்களின் சம்பளத்துக்கு மட்டும் செல்கிறது. மொத்த ஊழியர்களில் குறைந்தபட்சம் 50% பேர், மின்சக்தி அமைச்சின் அடுத்தடுத்த அமைச்சர் களால் அரசியல் நியமனம் பெற்றவர்கள்.

இத்தகைய அதிகப்படியான பணியாளர்கள் அதிக சம்பளம் பெறுவதால், நுகர்வோரின் மின் கட்டணத்தை மின்சார சபையால் குறைக்க முடியாது என்பதில் ஆச்சரியமில்லை. இலங்கையர்கள் தெற்காசிய நாடுகளிலுள்ள தமது சகாக்களை விட சராசரியாக 2.5 முதல் 3 மடங்கு அதிகமாக மின்சாரத்துக்கு கட்டணமாகச் செலுத்துகின்றார்கள். எங்கள் மின்சார சபை பொறியியலாளர்கள் பல ஆண்டுகளாக மின் உற்பத்தியை எவ்வாறு திறமையற்ற முறையில் நிர்வகித்துள்ளனர் என்பதை இது காட்டுகிறது.

இலங்கையின் மின்சார விநியோகக் கட்டுமானம் புனர்நிர்மாணத்துக்கு ஆளாக வேண்டும். இதை இந்த நெருக்கடி மீண்டும் கோடு காட்டியுள்ளது. இலங்கைக்கு அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தரும் தகவல்தொழில்

நுட்பத் துறை மற்றும் உல்லாசத்துறை ஆகியன தவிர்க்கவியலாமல் தடையற்ற மின்சார விநி

யோகத்திலேயே தங்கியுள்ளன. இலங்கையின் பொருளாதார எதிர்காலத்தில் மின்சார விநி

யோகம் பிரதான பங்களிப்பை வழங்க வேண்டும்.

இலங்கையின் மின்சார உற்பத்தி, வழங்கல், மின்கட்டணங்கள் ஆகியன சீரமைக்கப்படாது விட்டால் தவிர்க்கவியலாமல் நமது மின்சக்திக்கான இறைமையை நாம் இழக்க நேரிடும். இந்தியா நீண்டகாலமாக இருநாடுகளுக்கும் இடையிலான மின்சார பரிவர்த்தனை இணைப்பைக் கோரி வருகிறது. இதுவரை அதை வெற்றிகரமாக நாம் தடுத்து வந்திருக்கிறோம். தென்னிந்தியா மிக அதிகமான மின்சாரத்தை (குறிப்பாக புதுப்பிக்க சக்தியை) உற்பத்தி செய்கிறது.

அது தனது மேலதிக மின்சாரத்தை விற்பனை செய்வதற்கான சந்தையைத் தேடுகிறது. அதன் முக்கியமான இலக்கு இலங்கை. இலங்கையின் மின்சாரக் கட்டமைப்பைக் கைப்பற்றுவதற்கான பணிகளில் கடந்த ஒரு தசாப்தகாலமாக இந்தியா ஈடுபட்டு வருகிறது. இலங்கையின் சக்தி மூலங்கள் மீதான அதிக கவனத்தை சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் செலுத்துகின்றன.

கடந்தவார மின்தடை அரசுக்கு இன்னொரு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. பிரச்சினை

களை ஆழமாகவும் விரிவாகவும் நோக்குவதும் அதற்கான நிலையான நீண்டகாலத் திட்டங்களை உருவாக்குவதும் நடைமுறைப்படுத்துவதும் முக்கியம். காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாய், ஏதோ காரணத்துக்காய் நிகழ்ந்த மின்தடைக்கு காலத்துக்கொரு காரணம் சொல்வது அபத்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *