சைவமக்களால் போற்றப்படும் மகாசிவராத்திரி விரதம்
மகா சிவராத்திரி விரதம் சைவ மக்களால் அனுஷ்டிக்கப்படும் சிவனுக்குரிய சிறப்பு வாய்ந்த விரதமாகும். சிவராத்திரி ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூலாகும்.
இவ்விரதத்தின் மூலம் சிவலோகத்தையும் சிவசாயுட்சியத்தையும் அடைவார்கள். சிவராத்திரி காலத்தில் சிவபூஜை செய்பவர்களுக்கு சுகவாழ்வும் பரத்தில் கைவல்யமும் கிட்டுமெனச் சொல்லப்படுகின்றது.
சிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாக சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
சிவராத்திரி புண்ணிய தினத்தில் சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிஷேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்ப பொருட்களைக் கொடுத்து உதவலாம். மகா சிவராத்திரி மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்தசியன்று வருவதாகும். மகா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் சிறப்புடையது.
பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குகிறது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லாப் பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது. மகா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ் சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.
சிவராத்திரி என்ற சொல்லே மோட்சம் தருவதெனப் பொருள் பெறும். சிவ வசீகரண மந்திரத்தை ருத்திர பூமியில் இந்தப் புண்ணிய நாளில் ஜெபம் செய்து தேவதா வஸ்யம் முதல் பல இலாபங்களை அடையலாம். குருவான சிவபெருமான் இதற்கு அருளுவார். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியானசதுர்த்தசி திதி ஆகும். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க மகா சிவராத்திரி ஆகும்.
இவ்விரதத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில், எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார்.
அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் சிவராத்திரி என்று பெயர் பெறவேண்டுமென்றும் அதனைச் சிவராத்திரி விரதமென்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் அதைக் கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டுமென்று பிரார்த்தித்தார். இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான் சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.
மகா பிரளயத்தின் பின்னர் எம்பெருமான் சிவபெருமான் தனியாக இருந்து ஆழ்ந்த தவத்தில் மூழ்கியிருந்தார். எப்போதும் உடனாய சிவகாமியம்மை மீண்டும் அண்டசராசரங்களையும் படைக்க வேண்டி எம்பெருமானை நோக்கித் தவமிருந்தார். அன்னையின் தவத்தின் பலனாக ஐயன் திருவருட்சம்மதம் அருளினார். அன்னையின் தவத்தில் மகிழ்ந்த எம்பெருமான் அன்னையின் திருவுள்ள விருப்பத்துக்கமைய இந்நாளாகிய சிவராத்திரிச் சாமபொழுதில் கண்விழித்து விரதமிருப்பவர்க்குரிய பலனைத் தந்தருளினார்.
அம்பிகைக்கு சிவன் அருவுருவில் (உத்பவம்) உபதேசம் செய்த ஆகம உபதேச புண்ணிய காலமான மகா சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கும் போது புத்திசாலி குழந்தைகள் அமைவர். குபேரனிடம் இருப்பது போல் வற்றாத செல்வம் கிடைத்து நிலைக்கும். ஒரு வருடம் முழுவதும் ஐந்து பிரிவு சிவராத்திரி விரதம் கடைப்பிடித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்குமென்பது ஐதீகம்.
சிவராத்திரி விரத முறையில் சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்? சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். உபதேசம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு உடைகள் மற்றும் உணவை அந்தணர்க்குத் தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும்.
சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன் தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.
சிவராத்திரியன்று அதிகாலை எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்து சிறப்பாக வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவதும் நாவினுக்கருங்கலம் ஆனதும் பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்றறுப்பதுமான இறைவனின் பஞ்சாட்சர மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். எதுவும் உண்ணுதல் கூடாது. ஆலயம் சென்று லிங்க மூர்த்தியையும் அம்பாளையும் தரிசித்து வரலாம். நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும்.
நான்கு யாம வழிபாட்டுக்குரிய திரவியங்கள் முதல் யாமம் வழிபட வேண்டிய மூர்த்தம் சோமாஸ்கந்தர், அஷேகம் பஞ்சகவ்யம் , அலங்காரம் வில்வம், அர்ச்சனை தாமரை அலரி , நிவேதனம் பால் அன்னம் சக்கரைபொங்கல் , பழம் வில்வம் , பட்டு செம்பட்டு, தோத்திரம் இருக்கு வேதம் சிவபுராணம், மணம் பச்சைக் கற்பூரம் , தேர்ந்த சந்தணம் , புகை சாம்பிராணி , சந்தணக்கட்டை , ஒளி புட்பதீபம்.
இரண்டாம் யாமம் வழிபட வேண்டிய மூர்த்தம் தென்முகக் கடவுள். அபிஷேகம் பஞ்சாமிர்தம் , அலங்காரம் குருந்தை , அர்ச்சனை துளசி , நிவேதனம் பாயசம் சர்க்கரைப் பொங்கல் , பழம் பலா , பட்டு மஞ்சள் பட்டு , தோத்திரம் யசுர் வேதம் கீர்த்தித் திருவகவல், மணம் அகில் சந்தனம், புகை சாம்பிராணி குங்குமம், ஒளி நட்சத்திரதீபம்.
மூன்றாம் யாமம் வழிபட வேண்டிய மூர்த்தம் இலிங்கோற்பவர். அபிஷேகம் தேன், அலங்காரம் கிளுவை விளா, அர்ச்சனை மூன்று இதழ் வில்வம் சாதி மலர், நிவேதனம் எள்அன்னம், பழம் மாதுளம், பட்டு வெண் பட்டு, தோத்திரம் சாம வேதம் திருவண்டப்பகுதி, மணம் கஸ்தூரி சேர்ந்த சந்தணம், புகை மேகம் கருங்குங்கிலியம், ஒளி ஐந்துமுக தீபம்.
நான்காம் யாமம் வழிபட வேண்டிய மூர்த்தம் சந்திரசேகரர் (இடபரூபர்). அபிஷேகம் கருப்பஞ்சாறு வாசனை நீர், அலங்காரம் கருநொச்சி, அர்ச்சனை நந்தியாவட்டை, நிவேதனம் வெண்சாதம், பழம் நானாவித பழங்கள், பட்டு நீலப் பட்டு, தோத்திரம் அதர்வண வேதம், போற்றித்திருவகவல், மணம் புணுகு சேர்ந்த சந்தணம், புகை கர்ப்பூரம் இலவங்கம், ஒளி மூன்று முக தீபம்.
மகா சிவராத்திரி புண்ணிய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும். காரிய வெற்றியும் ஏற்படும். சிவாய நம என்று சிந்தித்திருந்தால் அபாயம் நமக்கு ஏற்படாது உபாயம் நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்தப் புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.பொருளாதார நிலையும் உயரும்.
இதனால்தான் சிவராத்திரி விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது. சைவ அன்பர்களாகிய நாம் சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து இன்மை, மறுமைப் பயன்களைப் பெற்று உய்வோமாக.