உக்ரைனில் உள்ள கனிம வளங்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யத் தயார் – ரஷ்ய ஜனாதிபதி
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைன் பகுதிகளிலிருக்கும் அரியவகை கனிம வளங்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யத் தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு அளித்த உதவிகளுக்குப் பதிலாக அந்த நாட்டின் அரியவகை கனிமங்கள் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்திவரும் சூழலில் ரஷ்ய ஜனாதிபதி இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தனது அமைச்சர்கள் மற்றும் பொருளாதார ஆலோசகர்களுடன் காணொலி மூலம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதி பேசியதாவது:
“அரியவகை கனிமங்கள் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து கூட்டாண்மை நாடுகளுடனும் இணைந்து செயற்படத் தயாராக இருக்கிறோம். ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா பெருமளவில் அலுமினியம் இறக்குமதி செய்துவந்தது. அதை அந்த நாடு மீண்டும் தொடங்கலாம்.
உக்ரைனில் இருப்பதைவிட ரஷ்யாவில் மிக அதிகமாக கனிம வளம் உள்ளது. அரியவகைக் கனிமங்களைத் தோண்டியெடுப்பதற்காக அமெரிக்காவுடன் மேற்கொள்ளக்கூடிய ஒப்பந்தத்தில் உக்ரைன் பகுதியாக இருந்து தற்போது ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளும் இடம் பெறும்” என்று கூறினார்.
ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்க முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறும் ட்ரம்ப் அரசு, உக்ரைனுக்கு நேட்டோவில் இடம் அளிக்கப்படாது என்றும் திட்டவட்டமாகக் கூறிவருகிறது.