07 துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அமைக்க பிரேரணை; சபையில் அங்கீகரிப்பு
பத்தாவது பாராளுமன்றத்தில் 07 துறைசார் மேற்பார்வைக் குழுக்களை அமைப்பது தொடர்பான பிரேரணை சபையில் அங்கீகரிக்கப்பட்டது.
பாராளுமன்றத் தெரிவுக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, சபைமுதல்வர், அமைச்சர் பிமல் ரத்னாயக்கவினால் குறித்த பிரேரணை நேற்று (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், இதற்கு சபை அங்கீகாரம் வழங்கியது. இதற்கு அமைய குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கான தலைமைத்துவங்கள் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி மத்தியில் பகிர்ந்தளிக்கப்படும் முறைக்கும் இணக்கம் காணப்பட்டது.
இதற்கமைய, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு ஆகிய நான்கு குழுக்களின் தலைமைப் பொறுப்புக்களை ஆளும் கட்சிக்கு வழங்கவும் இணங்கப்பட்டது.
அதேபோல, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் தலைமைப் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டது.