பாகிஸ்தானுக்கு வரும் சீக்கிய பக்தர்களுக்கு இணையவழியில் இலவச விசா
பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு வரும் சீக்கிய பக்தர்களுக்கு இணையவழியில் இலவச விசா வழங்கப்படும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானுக்கு அவர்கள் வந்திறங்கிய 30 நிமிடங்களில் இலவச விசா வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தி குறிப்பில் ‘கடந்த காலங்களில் பாகிஸ்தானுக்கு சீக்கிய பக்தர்கள் வருவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தன. இதை சீர்செய்து பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனித தலங்களில் சீக்கியர்கள் எளிதில் வழிபடும் விதமாக விசா நடைமுறைகளில் மாற்றங்களை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து பாகிஸ்தானுக்கு வரும் சீக்கிய பக்தர்களுக்கு எவ்வித கட்டணமுமின்றி இணையவழியில் 30 நிமிடங்களில் விசா வழங்கப்படும்.
இந்த நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படும்.
ஆண்டுக்கு பத்துமுறை கூட சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு பயணிக்கலாம். ஒவ்வொரு முறையும் இன்முகத்துடன் பாகிஸ்தான் உங்களை வரவேற்க காத்திருக்கிறது. முஸ்லிம்களின் புனிதத் தலமாக சவூதி அரேபியா இருப்பதைப்போல, சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் உள்ளது.
தற்போது ஆண்டுக்கு 1 இலட்சம் சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானுக்கு வருகின்றனர். இந்த எண்ணிக்கையை 10 இலட்சமாக உயர்த்த நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் நக்வியின் இந்த முடிவுக்கு வெளிநாட்டிலிருந்து வந்த சீக்கிய பக்தர்கள் குழுவினர் நன்றியை தெரிவித்தனர். பாகிஸ்தானில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக 124 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு இலவச விசாக்களை பாகிஸ்தான் அரசு வழங்கி வருகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.